Tuesday 14 April 2020

சிறுகதை



தாய்
முனைவர் ஆ. அஜ்முதீன், எம்.ஏ., பி.எட்., எஸ்.எல்.இ.டி., பிஎச்.டி., 
முதுகலை தமிழாசிரியர், பிஜிடிஇடி,. சிடி,. சிஎம்,. சிஜிடி,.

இறந்தவர்களை அடக்கம் செய்யும் அந்த இடத்தைப் பள்ளிக்கொல்லை என்று அழைப்பது தான் எங்கள் ஊர் வழக்கம்.  நான்கு புறமும் சுற்றுச்சுவர் நடுவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருகிறவர்களுக்கான ஒரே ஒரு  பாதை மட்டும் அங்கு உண்டு.
     யாருமில்லா அந்த இடத்தில் சிகப்புநிற பெண் நாய் ஒன்று வந்து தங்கியது.  ஓரிரு நாட்களில் அது மூன்று குட்டிகளை ஈன்றது.  மனிதர்கள் யாரும் வராத இடமாகையால் அதற்கும் அதன் குட்டிகளுக்கும் அதைவிட பாதுகாப்பான இடம் வேறு இருக்க முடியாது என்று அது கருதியது.
     தற்பொழுதுதான் மழை பொழிந்த இடமாகையால் அந்த இடம் முழுவதும் பச்சைபசேல் என்று புல்தரையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படாத மரங்கள் பசுமையாக காட்சி தந்து நிற்பதும் அந்த இடத்திற்கு அழகை அதிகமாக்கின.  இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படும் என்று ஆற்று மணல் மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தது.  அந்த மணல் குவியலின் ஓரத்தில் பழைய பயன்படாத மரப்பலகைகளும் கட்டைகளும் கொட்டிக்கிடந்தன. அவற்றின் ஓரத்தில் அந்த நாய் பள்ளம்தோண்டி தான் படுக்கும் அளவிற்கும் தன்பிள்ளைகள் தங்கும் அளவிற்கும் ஏற்றவாறு ஒரு வீட்டை தனது கால்களாலேயே கட்டி முடித்தது. அந்த அறையிலிருந்து ஒரு வாரத்திற்கு தனது பிள்ளைகளை விட்டுப் பிரியாது உணவின்றி கண்ணும் கருத்துமாக அவற்றை அந்த நாய் காத்து வந்தது.  மிகுந்த பசி எடுக்கும் வேளைகளில் தனது பிள்ளைகளைத் தனது கால்களால் தட்டிக்கொடுத்தும் தன் நாவினால் வருடி விட்டும் தூங்க வைத்துவிட்டு உணவுத் தேடிச் செல்லும். உணவு கிடைக்கும் வரை அது சுற்றினாலும் அதனுடைய மனம் முழுக்க தனது குட்டிகளின் எண்ணமே ஓடிக்கொண்டிருக்கும்.  குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு குழந்தை விழிக்கும் முன் கடைக்குச் சென்று திரும்ப வேண்டுமே என்று பதைபதைக்கும் ஒரு தாயின் உள்ளம் போல் அது உணவுக்காக அழையும்.  வழக்கம் போல் கிடைத்ததை உண்டு  மனிதர்களின் கல்லடிகளுக்குத் தப்பி தன் குட்டிகளை காணும் வரை அந்த நாய் படும்பாடும் அதன் மனம் பதைபதைக்கும் நிலையையும் நம்மால் உணர முடியாது.   அந்தக் கடவுளே அறிவான். 
நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.  குட்டிகளின் வளர்ச்சி தாய்க்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. மூன்று குட்டிகளும் முத்தான சத்தான அழகான குட்டிகள்.  பாரதி பாடினானே “சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி” அதனைப் போன்று ஒரு குட்டி. அது பெண் குட்டியும் கூட. ஏனைய இரண்டில் ஒன்று ஆரஞ்ச் நிறத்தில் இருந்தது. மூன்றாவது குட்டி அமைத்திக்குப் பெயர் பெற்ற வெள்ளை நிறம்.  முதுகுப்புறம் மட்டும் தன் சகோதரனின் ஆரஞ்ச் நிறத்தை வட்டமாய் பெற்றது.  மூன்றும் அந்தப் பள்ளத்தில் படுத்துறங்கும் காட்சி அழகானது.
வளர்ச்சி அவற்றை அந்த பள்ளத்தில் தங்கவிடவில்லை.  வெளியுலகைக்காண மூன்றும் ஆவல் கொண்டன வெளியே வந்தன. மணல் மேட்டில் தாய் படுத்திருக்க அதன் மேல் ஏறி குட்டிகள் விளையாடின.  மணல் குவியலின் உயரத்திற்குச் சென்று தள்ளாடி தள்ளாடி உருண்டு தரைக்கு வந்தன.  ஒன்றின் வாலை மற்றொன்று பிடித்து இழுத்து வம்பு செய்தன.  அவற்றின் விளையாட்டுக்களைக் காணும் தாய் நாய்க்கு ஆனந்த களிப்பு வெளிப்படும்.  அவ்வப்போது சண்டையிடும் குட்டிகளைத் தனது அழுத்தமான குரலால் பயமுறுத்தும்.  ஆனால் அவற்றைக் கடிக்காது.
 தாய் அருகில் இருக்கும் தைரியத்தில் அவற்றின் விளையாட்டுக்கள் அதிமாயின.  மணல் குவியலை விடுத்து புல் தரைக்கு ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடின.  ஆரஞ்ச் சாம்பலை விரட்டும் சாம்பல் வெள்ளையனை விரட்டும்.  மீண்டும் தமது தாயின் அருகில் வந்து அவை அமரும்.  முதலில் யார் வந்து தாயைத் தொடுகிறார்களோ அவர்களுக்கே தாயின் முகர்தல் கிடைக்கும்.
இப்பொழுது தாய்நாய்க்கு தன்னம்பிக்கை அதிகமானது.  தன்பிள்ளைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்போது நமக்கு என்ன கவலை தைரியமாக உணவு தேடிச்செல்லலாம் என்று அது வெளியுலகைக் காண புறப்பட்டது.  நன்றாக உணவு தின்று விட்டு  மீண்டும் தன் வீட்டிற்கு ஓடி வரும்.  தன் குழந்தைகள் நிம்மதியாய் தூங்குவதைக் கண்டு பெருமூச்சு விட்டு அவற்றிற்கு அருகில் சென்று படுக்கும்.
இவ்வாறு சில நாட்கள் நகர்ந்தன.  அன்று அந்த நாய்க்குப் பகலில் பசி எடுத்தது.  தன் பிள்ளைகளை விளையாட வைத்து விட்டு அவற்றிற்குத் தெரியாமல் அந்தப் பள்ளிக்கொல்லையை விட்டு பக்கத்தில் இருக்கும் தெருவிற்கு உணவு தேடச் சென்றது.  அன்று விடுமுறை தினமாகையால்  தெருவில் சிறுவர்களின் விளையாட்டுக்கள் அதிகமாகவே இருந்தன.  அவர்களின் கண்ணில் படாமல் தெருவின் முக்கைத் தாண்டி திரும்புகையில் அருகில் இருக்கும் வீட்டிலிருந்து பழைய சோறு கொட்டப்படுவதைக் கண்டு ஓடிச்சென்று சாப்பிட்டது.  அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டுப் படிக்கட்டில் இரண்டு வயதுக்குழந்தை கால் தடுமாறி தவறி விழுந்தது.  அந்தக் குழந்தையின் அழுகையைக்கண்டதும் நாய்க்கு உள்மனது ஏதோ சொல்ல அந்த சோகம் தாளாமல் நாய் குரைத்தது.  அந்தக் குழந்தையின் தாய் ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள்.  தன் பிஞ்சுக் குழந்தையின் அழுகையை நிறுத்த முத்தமழைப் பொழிந்தாள்.  குழந்தை சிரித்தது.  நாயின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க தனது குட்டிகளைக் காணப் புறப்பட்டது.
இந்த நேரத்தில் தான் பள்ளிக்கொல்லையில் பத்து இளைஞர்கள் தமது கைகளில் தடிக் கம்புகளை எடுத்துக்கொண்டு வெறிபிடித்தவர்கள் போல் நுழைந்தனர்.  அவர்களின் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த நாய்க்குட்டிகள் திசைக்கு ஒன்றாய் ஓடின.  வெள்ளைக்குட்டி மாத்திரம் தனது வீடாகிய அந்தப் பள்ளத்திற்குள் சென்று பதுங்கியது.  மற்றவை இரண்டும் ஓடிக்கொண்டிருந்தன.  இளைஞர்கள் கூட்டம் இரு குழுவாகப் பிரிந்தனர்.  ஐந்துபேர் கொண்ட கும்பலில் ஒருவன் தனது கையில் வைத்திருந்தக் கட்டைக் கம்பினை எடுத்து வீச அது சாம்பல் நிறக்குட்டியின் முதுகில் பட்டது.  உடனே அந்தக் குட்டி துடிதுடித்துக் கத்த மற்றொரு இளைஞன் தனது கையில் உள்ள கம்பால் ஓங்கி அடித்தான்.   இதுவரையிலும் அப்படி ஒரு அடியைப் பெற்றிறாத அந்த சாம்பல் நிறக்குட்டி நிலைகுழைந்தது.  அதனது முக்கலும் நின்றது முனகலும் நின்றது.  தனது கண் முன்னால் தனது சகோதரியைக் கொல்லும் அந்த இளைஞர்களைக் காவிநிற நாய்க்குட்டி பார்த்தது.  அதனால் குரைக்கக்கூட முடியவில்லை.  அதன் கண்களில் உயிர் பயம்.  இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற உறுதியோடு ஓடியது.  அவர்களிடமிருந்தா தப்பிக்க முடியும் அரையடி நீளமே உள்ள அந்த பிஞ்சுக்கால்களால் எவ்வளவு தூரம் ஓட முடியும்.  இளைஞன் ஒருவன் வீசிய அரைச்செங்கல் அதன் கால்களை ஒடித்தது.  அடிப்பட்ட அந்தக்குட்டியால் அதற்குமேல் நகர முடியவில்லை.  ஒருவன் கட்டையால் ஓங்கி அதன் மண்டையில் அடித்தான். மற்றவனும் அடித்தான்.  அதனது சத்தம் முனகலானது.  அதற்குப்பின் அதன் சத்தம் நின்றது.  அதன் பார்வை மட்டும் அவர்களின் மீது இருந்தது.  அந்தப் பார்வையின் அர்த்தம் உயிர் போகும் நிலையில் அதன் துடிதுடிப்பின் நிலையை நமக்கு நிச்சயம் உணர்த்தும்.
அடிப்பட்ட இரண்டு குட்டிகளையும் தனித்தனியே அதன் கால்களில் கயிறு கொண்டு கட்டி இழுத்து வந்தனர். 
இதற்கிடையில் ஐந்து பேர் கொண்ட மற்றொரு கும்பல் வெள்ளைநிற நாய்க்குட்டியை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.  மணற்குவியலுக்குக் கீழே பள்ளம் மேல்பகுதியில் மரப்பலகைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.  அதற்குக் கீழே தான் நாய் தனது வீட்டைக் கட்டியிருந்தது.  இளைஞர்களுக்குச் சிரமமாக இருந்தாலும் இரு இளைஞர்கள் சேர்ந்து பலகைகளை அப்புறப்படுத்தினர்.  மற்றவர்கள் அந்தப் பள்ளத்தைச் சுற்றி வளைத்து நின்றனர்.  ஒருவன் பெரிய கருங்கல்லை கையில் வைத்திருந்தான். மற்றொருவன் கயிறு வைத்திருந்தான்.  இன்னொருவன் கட்டைக்கம்பு வைத்திருந்தான்.  அவர்களின் ஆரவாரமும் கூச்சலும் பள்ளத்துக்குள் பதுங்கியிருந்த வெள்ளை நிறக்குட்டியை கதிகலங்க வைத்தது.  தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்கமே அதற்கு அதிகம் இருந்தது.  தன் தாய் வந்துவிடுமா?  வந்தால் இந்த நிலையில் தன்னைக் கண்டால்,  இதற்குக் காரணமான இவர்கள் எல்லோரையும் தனது கூரிய பற்களைக் காட்டியும், தாங்கள் சண்டையிடும்போது அழுத்தமான குரலால் தங்களை மிரட்டுவது போல் இவர்களை பாய்ந்து விரட்டுமா என்று எண்ணியது.  அதன் எண்ணம் வீணானது.  அதன் மண்டையில் இடி விழுந்ததைப் போல ஒரு இளைஞனின் கம்பு அதன் தலையில் விழுந்தது.  அது நடுநடுங்கி பயந்து கத்தியது.  வேகவேகமாக ஒருவன் நீளக்கம்பை வைத்துக் குத்த அந்த வெள்ளைநிறக்குட்டி பள்ளத்தை விட்டு பாய்ந்து வெளியேறியது.  அதனைக் கண்ட  அந்தக்கும்பல் அதை விரட்டி ஒருவர் பின் ஒருவர் அடித்தனர்.  அது மயங்கி விழுந்தது.  உடன் ஒருகாலில் கயிற்றைக் கட்டினர்.  அந்தப் பள்ளிக்கொல்லையின் நுழைவு வாயிலில் உள்ள செட்டில்  நாய்க்குட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டனர்-  அவற்றின் முக்கலும் முனகலும் அவர்களின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன.  உடனே கட்டித் தொங்கும் நாய்க்குட்டிகளை வலிமையான கம்புகளால் ஓங்கி ஓங்கி அடித்தனர்.  அவை தெற்கிற்கும் வடக்கிற்கும் மேலும் கீழும் ஊஞ்சல் போல் ஆடின.  இதைத்தான் உயிர் ஊசலாடுகிறது என்பார்களோ எனக்குப் புரியவில்லை.  அவற்றின் வாய்களிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.  கயிறு அறுந்து விழும் அளவிற்கு அடித்துக்கொன்றனர்.  அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறிய மனநிறைவுடன் அங்கிருந்து அகன்றனர்.
இளைஞர்கள் சென்ற சிறிது நேரத்தில் மனம் நிறைய தன் பிள்ளைகளை நினைத்துக் கொண்டும் அவர்களுக்கு இன்று புதிய விளையாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலுடனும் தாய்நாய் அங்கு வந்தது.  சாம்பல் நிறம், காவிநிறம், வெள்ளைநிறம் அத்தனையும் இரத்த வெள்ளத்தில் சிவப்புநிறமாகக் கிடக்கும் காட்சியைக் கண்டதும் தாயின் உள்ளம் பதறியது. அட நான் பெத்த மக்கா என்ன ஆச்சு உங்களுக்கு?.  அட மனுச மக்கா ஊருக்குள்ள இருந்தா உங்க தொந்தரவு தாங்காது என்று தானே இடுகாட்டில் வந்து வீடுகட்டினேன். என் வீட்டையே சுடுகாடாக்கீட்டீகளே. உங்க குழந்தை தவறி விழுந்தா ஓடி வந்து தூக்கி கொஞ்சீனீங்களே அம்மா. எம்புள்ளைங்க கதியைப் பார்த்தீங்களா தாயே?
இந்த பிஞ்சுப்பிள்ளைகள் நான் பெத்த செல்லக்குட்டிகள் என்னை தனியே தவிக்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்களே.  அடே மனிதர்களே உங்கள் இனவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாதா? என்று அந்த தாய் அழுதது.  அதன் கதறல் மெல்ல மெல்ல அடங்கியது. விலங்காய் இருந்தாலும் அதுவும் ஒரு தாய் என்பதையும் அதன் பிள்ளைகளும் உயிர்கள் தான் என்பதையும் இந்த மனித இனம் ஏன் மறந்தது.

No comments:

Post a Comment