Thursday 23 April 2020

சாலையோரம்


சாலையோரம்
இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.  இந்த கிழக்குக் கடற்கரைச் சாலையும் அதிலிருந்து பிரியும் பட்டுக்கோட்டை சாலையும் மறக்க முடியாது.  அதிராம்பட்டினத்திலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பட்டுக்கோட்டை.  அதிராம்பட்டினத்து இளைஞர்கள் பழச்சாறு அருந்துவதாக இருந்தாலும்  பட்டுக்கோட்டைக்குத்தான் செல்வார்கள்.  அதற்குக் காரணம் அதிராம்பட்டினத்தில் பழச்சாறு கடையே இல்லை என்று கூற முடியாது.  எந்தப் பொருளாக இருந்தாலும் அதைப் பட்டுக்கோட்டை போய்தான் வாங்க வேண்டும் என்ற மோகமே எனலாம்.  இரவு பத்து மணிவரை இந்த சாலையில் வாகனங்கள் பறந்தவண்ணம் இருக்கும். அதிராம்பட்டினத்து இளைஞர்கள் மைனர் மேஜர் என்று எல்லாரும்  இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத பலரும் இருசக்கர வாகனத்தில் சாலையில் டயர் படாமலே பறப்பதும் அடிக்கடி 108 வருவதும் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் படுப்பதும் அன்றாடம் நடக்கும் வாடிக்கையாகிவிட்டது.
     ஊர் பெரியவர்களும் முக்கியப் பிரமுகர்களும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேசிய வார்த்தைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின என்னிடம் கூட அதிராம்படினத்துக் காவலர் ஒருவர் இளைஞர்கள் வேகமாக வாகனத்தில் செல்வதால் ஏற்படும் உயிர் சேதம் பற்றி நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். என்ன செய்வது, எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் கூட தான் ஓசியாகப் பெற்ற இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்று பரபரப்பு மிகுந்த சாலையில் வயதான ஒருவர் மீது மோதி அவர் உயிருக்குப் போராடி பிறகு உயிரைவிட்ட நிகழ்வு கூட இன்று என் நினைவுக்கு எட்டுகிறது.  எத்தனையோ சாலைவிதிகள் இருப்பினும் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்ற மனநிலை நம்மிடையே இல்லாதது வருத்தத்தைத் தருகிறது.
     சென்ற ஆண்டு இப்படித்தான் என் சகோதரிக்கு உடல்நலக்குறைவு என்று தகவல் வரவே நானும் காலை பத்து மணிக்கெல்லாம் தஞ்சாவூருக்குச் சென்று விட்டேன்.  மருத்துவனையிலிருந்து எப்போது புறப்படுவேன் என்று தெரியாததால் பேருந்தைத் தவிர்த்து என் இருசக்கர வாகனத்திலேயே சென்றிருந்தேன்.  அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் என்று வழக்கமாக நான் செல்லும் சாலைதைன்.  இந்த வழியில் எத்தனை வலைவுகள் எத்தனை வேகத்தடைகள், எந்தெந்த இடங்களில் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பெரிய பள்ளங்கள், எங்கெங்கு நீண்டபஞ்சர் போடப்பட்ட சாலை என அனைத்தும் எனக்கு அத்துப்படிதான்.  அதனால் நான் செல்லும்பொழுது இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளையும் மரங்களையும் ரசித்துக்கொண்டே செல்வதுதான் என் வழக்கம்.  ஆனால் என் சகோதரிக்கு உடல்நலம் நலிவடைந்துள்ள இந்த நேரத்தில் இயற்கையை ரசித்துச் செல்வதற்கும் செல்போனில் பாட்டுக் கேட்டுச் செல்வதற்கும் மனம் இடம் தரவில்லை.  பதட்டம் நிறைந்த மனநிலையில் இது சாத்தியப்படாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
     மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பு என்னைக் கடிகாரத்தைக் கூட பார்க்கவிடவில்லை.  எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே இரவு பதினொரு மணிக்குத்தான் ஏற்பட்டது.  அதன் பிறகே எனது இருசக்கர வாகனத்தில் தஞ்சைக்கு விடை கொடுத்துவிட்டும் மருத்துவமனைக்கு நன்றி கூறிவிட்டும் புறப்பட்டேன்.  இப்பொழுது தனித்துவிடப்பட்ட இருளில் தனியனாய் ஒரே ஒரு இருசக்கர வாகன முகப்பு வெளிச்சத்தை நம்பி நான் பயணத்தைத் தொடர்ந்தேன்.
    என்னை எந்த வாகனம் கடந்து செல்லாத போது நான் மட்டும் சாலையோரம் தலையசைத்துக்கொண்டிருந்த மரங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். 

No comments:

Post a Comment